search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கிரிக்கெட்"

    • கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
    • 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டராக ஜொலித்தவருமான கபில் தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் மனமுடைந்து விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்தது.

    இன்றைய கிரிக்கெட் வீரர்கள், மன்னிக்கவும் அவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். விளையாடும் முறை மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ளாததை கற்றுக் கொள்வோம்.

    ஒருநாள் போட்டியில் நான் ஒருமுறை பந்து வீசவில்லை. இதை நினைவில் வைத்து இருந்தால் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க மாட்டேன்.

    நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இளைஞர்கள் நம்மை விட சிறந்தவர்கள். அவர்களை வழி நடத்த எங்களுக்கு அனுபவம் உள்ளது. அவர்களை சிறப்பாக வழிநடத்த இயலும்.

    பள்ளி நாட்களில் இங்கு விளையாடும் போதெல்லாம் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இருக்கிறது. இதனால் சென்னை எனக்கு பிடித்த கிரிக்கெட் மைதானமாகும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

    கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது. கபில் தேவ், டோனி வரிசையில் ரோகித்சர்மாவால் இணைய முடியவில்லை.

    அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை இழந்தது. உலக கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கபில் தேவ், டோனிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.
    • நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை காண நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகள் முன்பு முடங்கி கிடக்கிறார்கள்.

    இந்த உலக கோப்பையை பாரீசில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் நடிகை மீனா. இன்று எல்லா வேலைகளையும் ரத்து செய்து விட்டு நடிகை மீனா தனது வீட்டில் டி.வி. முன்பு அமர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ரொம்ப பக்.... பக்... என்று உள்ளது. நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.

    இந்தியா வெல்லும் என்ற முழு நம்பிக்கையோடு நான் உலக கோப்பையை அறிமுகப்படுத்திய ஸ்டில்லையும், இந்திய அணி வெற்றி பெற்றதும் அந்த கோப்பையை வாங்குவதையும் இணைத்து நினைத்தது நடந்தது என்று வலைத்தளத்தில் பதிவிட ஒரு பட காட்சியையும் தயார் செய்து வைத்துள்ளேன். நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது.
    • கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு 2-வது உலக கோப்பை டோனி தலைமையில் கிடைத்தது. கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா 3-வது உலக கோப்பையை பெற்று தரும் வேட்கையில் உள்ளார்.

    இந்த போட்டித் தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தான் விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. 9 'லீக்' ஆட்டத்திலும் எளிதில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் மட்டும் சற்று போராட வேண்டி இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    ஆலன்பார்டர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1987-ம் ஆண்டு முதல் தடவையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதை தொடர்ந்து 1999-ல் ஸ்டீவ் வாக் தலைமையில் 2-வது உலக கோப்பையை வென்றது. ரிக்கி பாண்டிங் தலைமையில் 2003, 2007-ல் உலக கோப்பை கிடைத்தது.

    2015-ம் ஆண்டு மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா 5-வது உலக கோப்பையை கைப்பற்றியது. ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் வரிசையில் தன்னை இணைத்துக் கொள்ளும் வேட்கையில் கம்மின்ஸ் உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிச்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், டிரெவிஸ் ஹெட் ஆகியோரும், பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டார்க், ஹாசல்வுட் கம்மின்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இறுதிப் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இந்த ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இறுதிப்போட்டியை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே அகமதாபாத் மைதானத்தில் குவிய தொடங்கினர். நாட்டின் பல்வேறு நகரத்தில் இருந்து போட்டியை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியும், இசைக் கருவிகளும் இருந்தன.

    டிக்கெட் கிடைக்காதா? என்ற ஏக்கத்திலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்தை சுற்றி வலம் வந்தனர்.

    இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை ஜோராக இருக்கிறது.

    ஒரு டிக்கெட் ரூ.1.87 லட்சத்துக்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனையானது. ரூ.32 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ரூ.1.87 லட்சத்துக்கு விலை போனது.

    நாடு முழுவதும் கிரிக்கெட் இறுதிப் போட்டியை டெலிவிசனில் பார்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உலக கோப்பை கிரிக்கெட் ஜூரம் ஒட்டிக் கொண்டுள்ளது.

    • மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதய துடிப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. அனைத்து ஆட்டங்களிலும் அபார வெற்றியை பெற்று இந்த உலக கோப்பை போட்டியில் அசைக்க முடியாத அணியாக திகழும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு களம் இறங்குகிறது.

    இந்திய அணியின் வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். சென்னையிலும் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய திரை அமைக்கப்பட்டு ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மெரினாவில் விவேகானந்தர் இல்லம் அருகே 38 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் லேசர் ஷோ, விமான சாகசம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் ஆட்டத்தை காண்பதற்கும், வெற்றியை கொண்டாடுவதற்கும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் மெரினாவில் ரசிகர்கள் திரள்கின்றனர். பெண் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் கழிவறை வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு திரண்டிருந்தனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளிலும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை மனதில் வைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டால் அந்த வெற்றியை இன்னொரு தீபாவளியாகவே விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாக வெறித்தனமாக ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

    இப்படி நாடு முழுவதும் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஜூரம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாகவே காணப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள். இந்திய அணி கோப்பையை வென்று இந்திய மக்களின் மனதையும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

    • அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    • மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கிய இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் கடந்த 12-ந்தேதி முடிவடைந்தது.

    இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    மும்பையில் 15-ந்தேதி நடந்த முதல் அரைஇறுதியில் இந்திய அணி 70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தின.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.

    உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    இந்திய அணி 4-வது முறையாகவும், ஆஸ்திரேலியா 8-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளை யாடுகிறது. இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது 2-வது முறையாகும். 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 125 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2-வது தடவையாக உலக கோப்பை 2011-ம் ஆண்டில் கிடைத்தது.

    தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி மிகவும் அபாரமாக ஆடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் தான் விளையாடிய 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.

    இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

    2003-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். ஆஸ்திரேலியா பலம் வாய்ந்தது என்பதால் கடுமையாக போராட வேண்டும். வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

    ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டத்தில் தோற்ற பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் இறுதிப் போட்டி என்பதால் கூடுதல் நெருக்கடி இருக்கும்.

    அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தால் முகமது சிராஜ் அல்லது சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம். பேட்டிங்குக்கு முக்கியத்துவம் அளித்தால் சிராஜ் கழற்றி விடப்படுவார். ஒருவேளை இஷான் கிஷன் வாய்ப்பை பெற்றால் சூர்யகுமார் யாதவ் இடத்தில் தேர்வு பெறுவார்.

    ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் மாற்றம் இருக்குமா? என்பது முடிவு செய்யப்படும். இந்த தொடரின் 5-வது போட்டியில் இருந்து இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து வெற்றியை பெற்று வரும் அணியில் முக்கியமான இறுதி ஆட்டத்தில் மாற்றம் செய்ய கேப்டன் ரோகித் சர்மாவும் , பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விரும்ப மாட்டார்கள்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. டாப் 5 பேட்ஸ்மேன்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி 3 சதம், 5 அரைசதத்துடன் 711 ரன்னும், ரோகித் சர்மா 550 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), ஸ்ரேயாஸ் அய்யர் 526 ரன்னும் (2 சதம், 3 அரைசதம்), கே.எல். ராகுல் 386 ரன்னும் (1 சதம், 1 அரைசதம்), சுப்மன்கில் 4 அரை சதத்துடன் 350 ரன்னும் எடுத்துள்ளனர்.

    ரோகித் சர்மா சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 28 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதேபோல ஸ்ரேயாஸ் அய்யர் 24 சிக்சர் அடித்துள்ளார்.

    பந்துவீச்சில் முகமது ஷமி முதுகெலும்பாக திகழ்கிறார். அரைஇறுதியில் 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் 6 ஆட்டத்தில் 23 விக்கெட் கைப்பற்றி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். இறுதிப் போட்டியிலும் ஷமி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    பும்ரா 18 விக்கெட்டும், ஜடேஜா, 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 15 விக்கெட்டும், முகமது சிராஜ் 13 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    இந்திய அணியிடம் லீக் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. அந்த அணி பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இந்தியாவுக்கு சவாலாக விளங்குவார்கள்.

    ஆஸ்திரேலியா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என 3 துறைகளிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 2 சதம், 2 அரை சதத்துடன் 52 8 ரன்னும், மிச்சேல் மார்சல் 2 சதம், 1 அரை சதத்துடன் 426 ரன்னும், லபுஷேன் 304 ரன்னும், ஸ்டீவ் சுமித் 298 ரன்னும் எடுத்துள்ளனர். மேக்ஸ்வெல் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து சாதித்தார். அவர் 398 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல டிரெவிஸ் ஹெட்டும் சிறந்த அதிரடி வீரர் ஆவார்.

    வேகப்பந்திலும், சுழற்பந்திலும் ஆஸ்திரேலியா சிறப்பாக இருக்கிறது. சுழற்பந்து வீரரான ஆடம் ஜம்பா 22 விக்கெட் வீழ்த்தி இந்திய போட்டித் தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்களான ஹாசல்வுட் 14 விக்கெட்டும், ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ் தலா 13 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதிரடி, விறுவிறுப்புடன் இறுதிப்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.
    • பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டும்.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன.

    இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. அரை இறுதிக்கு தகுதி பெறும் 4-வது மற்றும் கடைசி அணி எது என்பதில் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன. நியூசிலாந்து நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +0.743 ஆக உள்ளது.

    பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் (ரன் ரேட் +0.036) உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்துடன் மோதுகிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டும்.

    ஆனால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூசிலாந்தின் ரன் ரேட்டை கடக்க முடியும். ஒரு வேளை இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்தால் அந்த இலக்கை பாகிஸ்தான் 3.4 ஓவர்களிலேயே எடுக்க வேண்டும்.

    பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இமாலய ரன்களை குவித்து பின்னர் இங்கிலாந்தை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும். இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பு முடிந்து விடும்.

    பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இல்லாததால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினமானது.

    8 புள்ளிகளுடன் உள்ள ஆப்கானிஸ்தானின் ரன் ரேட்-0.338 ஆக உள்ளது. அந்த அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றாலும் ரன் ரேட்டில் நியூசிலாந்து, பாகிஸ்தானை முந்துவது இயலாத காரியம்.

    • ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.
    • சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த போட்டியில் முகமது சிராஜும் சிறப்பாக செயல்பட்டார். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர்.

    ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அரை இறுதியை நெருங்கிவிட்ட தென் ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதை உறுதி செய்துவிடும். அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், மார்க் ராம், வான்டெர்துசன், கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் குயின் டான் டி காக் 545 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். பந்து வீச்சில் மார்கோ ஜேன்சன், ரபடா, மகராஜ், கோட்சி ஆகியோர் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நெதர்லாந்திடம் மட்டும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

    சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும்.
    • மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.

    10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் உலக கோப்பை போட்டி தொடரில் அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டது. மற்ற 3 அணிகள் எவை என்பதில் போட்டி நிலவுகிறது.

    தென்ஆப்பிரிக்கா 7 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அந்த அணி இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் (+2.290) நல்ல நிலையில் உள்ளது. ஒரு வேளை இரண்டு ஆட்டங்களிலும் தோற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து எந்த இடம் என்பது அமையும்.

    ஆஸ்திரேலியா 6 ஆட் டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி யுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும். 2 வெற்றி அல்லது ஒரு வெற்றி பெற்றால் மற்ற ஆட்டங்களின் முடிவை பார்க்க வேண்டும.

    நியூசிலாந்து அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஒன்றில் தோற்றால் மற்ற அணிகள் முடிவை பார்த்து வாய்ப்பு அமையும்.

    ஆப்கானிஸ்தான் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று உள்ளது. மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ரன் ரேட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவது முக்கியம்.

    பாகிஸ்தான் 6 புள்ளி களுடன் உள்ளது. எஞ்சி உள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். ரன் ரேட்டிலும் நல்ல நிலைக்கு வர வேண்டும். நியூசி லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும். அப்போது மற்ற ஆட்டங்களின் முடிவு சாதகமாக இருக்க வேண்டும்.

    தலா 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு ஏற குறைய வாய்ப்பு முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கடினம். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.

    வங்காளதேசம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    • பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றோடு ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி விடும். புனேயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தான் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (நெதர்லாந்து, இலங்கை) வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டியில் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா) தோற்றது.

    பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்காளதேசம் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மட்டுமே வங்காளதேசத்தை வீழ்த்தியது. பின்னர் 5 போட்டியில் தொடர்ச்சியாக தோற்றது.

    பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் வங்காளதேசம் இருக்கிறது.

    • விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.
    • விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    முதலில் 'டாஸ்' வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

    இதன் காரணமாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்த போட்டியின் போது பல நேரங்களில் ரசிகர்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினார்கள்.

    மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் 'ரிஸ்வான்' 49 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பப்பட்டது.

    இதனை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் 'விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.

    விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

    விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • அகமதாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
    • இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்கிற்கு 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்களையும் குவித்தனர்.

    ×